வாக்னர் தனியார் ராணுவத்தால் ரஷ்யாவில் இப்போது பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ரஷ்ய அதிபருக்குச் சொந்தமான விமானம் மாஸ்கோவில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா நாட்டில் உள்ள தனியார் ராணுவமான வாக்னர் இப்போது அந்நாட்டின் ராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளது. இந்த குழுவின் தலைவர் பிரிகோஜின் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றும் பிரிகோஜின் கூறியிருந்தார். மேலும், அங்கே எல்லையில் உள்ள ரோஸ்டோவ் நகரை வாக்னர் குழு முற்றுகையிட்டுள்ளது.
ரோஸ்டோவ் நகரில் உள்ள ராணுவ அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். மேலும், உக்ரைன் போருக்கு ரஷ்ய பாதுகாப்புத் துறையே முழுமையாகக் காரணம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் அதிபரையும் மக்களையும் ஏமாற்றி போரை ஆரம்பித்தாக அவர் விமர்சித்தார்.
இது ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள வாக்னர் தலைவர் பிரிகோஜின் இது ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கை என சாடியிருந்தார்.
அதேநேரம் கொஞ்ச நேரத்திலேயே தங்களைத் துரோகிகள் எனச் சொல்லி ரஷ்ய அதிபர் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும் நேரடியாக விமர்சித்திருந்தார். மேலும், வாக்னர் படை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அங்குள்ள விமான ரேடர் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள வ்னுகோவோ விமான நிலையத்திலிருந்து ரஷ்ய அதிபருக்குச் சொந்தமான விமானம் ஏர்போர்டில் இருந்து கிளம்பியுள்ளதை ரேடார் காட்டுகிறது.
மாஸ்கோவின் வ்னுகோவோ விமான நிலையத்திலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி ரஷ்ய அதிபருக்குச் சொந்தமான விமானம் கிளப்பியதால் FlightRadar24 என்ற நிறுவனம் ரேடார் தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்த விமானம் கிளம்பிய வடமேற்கு ட்வெர் வரை சென்றுள்ளது. அதன் பின்னர் அதன் சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதே வடமேற்கு ட்வெரில் தான் புதினுக்கு சொந்தமாக ஒரு வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வாக்னர் குழு மாஸ்கோவை நோக்கி நகர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அதன் தலைவர் பிரிகோஜின் அனைத்து நகரங்களிலும் தாக்குதலை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், புதினுக்கு எதிராகவும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதனால் புதின் மாஸ்கோவில் இருந்து கிளம்பி வேறு ஒரு இடத்திற்குச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. உள்நாட்டுப் பதற்றம்: இருப்பினும், இதை ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். புதின் ரஷ்ய அதிபர் மாளிகையில் இருக்கிறார் என்றும் ரஷ்யாவில் இப்போது நிலவும் உள்நாட்டுப் பதற்றத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் மாளிகைக்குச் சொந்தமான விமானம் மாஸ்கோவில் இருந்து கிளம்பியிருந்தாலும் அதில் புதின் பயணித்தாரா என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. எனவே, புதினின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது புதினுக்கு நெருக்கமானவர்கள் யாராவது இதில் பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படை ஒரு பக்கம் புதினை நெருக்க மறுபுறம் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைப் பதற்றத்தை அதிகரிக்கவே செய்கிறது.