” பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையால்தான் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவர் அதனை கூறி இருக்காவிட்டால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பிரபாகரன் தப்பிச்செல்வதற்காக மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தம் வழங்கினார் என சரத்பொன்சேகா கூறியுள்ள விடயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போரில் வெள்ளைக்கொடி (புலிகளால்) காட்டப்பட்டபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதையும் அவர்தான் (பொன்சேகா) சொன்னார். வெளிநாட்டில் ஒன்றையும், இங்கு வேறொன்றையும் கூறுகின்றார்.
பொன்சேகா போரை முடிக்க பங்களிப்பு செய்தவர். அதனால்தான் அவர் மனம் நோகும்படி நாம் கருத்துகளை முன்வைப்பதில்லை. ஆனால் அவர் (பொன்சேகா) தற்போது முழுநேர அரசியல்வாதி.
அன்று வெள்ளைக்கொடி கதையை அவர் கூறாமல் இருந்திருந்தால் நல்லது. இவ்வாறு வெள்ளைக்கொடி கதையை கூறாது, இன்று கூறும் (போர் நிறுத்தம்) கதையை கூறி இருந்தால் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்காது. வெள்ளைக்கொடி கதையை கூறியதால்தான் போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.” – என்றார்.