லிந்துலை, ஹோல்றீம் கொனன் தோட்டத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் வீடொன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
நேற்று (09) மாலை சுமார் 5.40 மணியளவில் இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த மின் இணைப்புப் பெட்டி தீப்பற்றி எரிந்துள்ளது. அத்துடன், வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டதுடன், அதன் பகுதிகள் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.
மேலும், வீட்டினுள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார உபகரணங்கள் செயலிழந்துள்ளதுடன், வீட்டிலிருந்த பல்வேறு பொருட்களும் தூக்கி வீசப்பட்டும் சில தீயில் எரிந்தும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் இடம்பெற்றபோது வீட்டினுள் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பிரிவின் கிராம உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு நேரில் சென்று சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாதிப்புகள் தொடர்பான விபரங்களையும் சேகரித்துள்ளார்.
