லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டுள்ளார்.
ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. தெற்கு லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி அபுதலிப் உயிரிழந்தார். அவருடன் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இஸ்ரேல் – லெபனான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.