‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (8) தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தில் வேலுகுமார் எம்.பியால் எழுப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரிந்த புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் தோட்டத்து பெண்ணுக்கு ஊருக்குவந்தவேளை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிவ்போரஸ்ட் பிரிவு ‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சுகாதார ஏற்பாடுகளை வழங்குவதற்கும், நிவாரண திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா” – என்று வேலுகுமார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

” தோட்ட கம்பனியின் (அரச நிர்வாகத்தின்கீழ் இயங்கும் கம்பனி) தலைவருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மக்களின் சமூகநலன்சார் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அம்மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும்.” – என்றார்.

Paid Ad