அமெரிக்காவிடமிருந்து மேலதிக வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்குரிய இரு தரப்பு பேச்சுகள் தொடரும் என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்கா கடிதம் அனுப்பிவைத்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வராவிட்டால் 30 சதவீத வரி விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 44 சதவீத வரியே விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுகளின் பயனாகவே அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான இரு தரப்பு பேச்சு தொடரும். ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கைக்கு வராவிட்டால்தான் 30 சதவீத வரி விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே, பேச்சுகள் மேலும் வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.