தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இன முறுகலை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்குவேட்டை நடத்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” செல்வராசா கஜேந்திரன்மீதான தாக்குதலின் பின்னணி குறித்து எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டில் தமிழ், சிங்களமக்கள் மத்தியில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தேர்தலுக்கு சென்று தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற எண்ணம் பெரும்பான்மை தலைவர்களுக்கு இருக்ககூடும்.
வாக்குவேட்டை நடத்துவதற்காக அவ்வாறான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகியுள்ளார். இந்த நாட்டில் அது முடியுமா? முடியாது. ஆனால் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு, தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகக்கூட வரலாம் என்ற சூழ்நிலை இலங்கையில் உருவாக வேண்டும். ” – என்றார்.










