லுணுகலை தொரபொத்த வனப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!

லுணுகலை, தொரபொத்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மற்றும் எட்டம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொரபொத்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அகழ்வு வட்டி, இழ்லன் கம்பிகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (I) வேஹித தேசப்பிரிய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (II) அஜித் பண்டார மற்றும் லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.எம். அபேபால ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

உப பொலிஸ் பரிசோதகர் விக்ரமசிறி, பொலிஸ் சார்ஜன்ட்கள் பிரேமரத்ன (35363), பண்டார (13592), நவரத்ன (31017) மற்றும் கருணாரத்ன ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

த.டிமேஷன்

Related Articles

Latest Articles