நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தியும் ஆயிரம் ரூபாவை முறையாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்தும் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.


தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதுடன், தொழிற் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.


அத்தோடு, தேயிலை செடிகளில் கொழுந்தின் விலைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.










