“22 ஆவது திருத்தச்சட்டமூலம் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்”

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தாமல், அவற்றை ஏற்றுக்கொண்டு மீளப் பரிசீலிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

மல்வத்து பீடத்தின் சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இரு பிரதான பிரிவுகளுக்குமான சங்கநாயக்க பதவியேற்ற சித்தம்முல்லே விமல கீர்த்தி ஸ்ரீ ஜினரதன வஜிர நாயக்க தேரருக்கு “ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை” வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

நீதித் துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது பொருத்தமற்ற செயலாகும். இது நீதியை நிலைநாட்டுவதற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாக அமைவதோடு, நீதித்துறை மீதான நம்பகத்தன்மையையும் ஜனநாயக வழிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்யும்.

அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்

மக்கள் பிரதிநிதிகள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெறுவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. ஊடகக் காட்சிப்படுத்தல்களையும் போலி நாடகங்களையும் தவிர்த்து, அவர்கள் வழங்கும் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, நாட்டின் நலன் கருதி முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அறநெறிக் கல்வியை மேம்படுத்தல்

நாட்டில் உள்ள விகாரைகள், தஹம் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்குரிய இடத்தை வெறும் வார்த்தைகளாக மட்டும் வைத்திருக்காமல், தஹம் கல்வியையும் ஏனைய மதங்களின் அறநெறிப் பாடசாலைகளையும் நடைமுறையில் மேம்படுத்த வேண்டும்.

தேசிய ஒற்றுமையும் நல்லிணக்கமும்

பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களுக்கும் அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்துச் சமூகத்தினரும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழும் போதே நாட்டின் இறையாண்மையும் அரசியல் சுதந்திரமும் உறுதிப்படும்.

Related Articles

Latest Articles