தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் குரோதத்தை விதைக்கும் விதத்தில் இனவாதத்தைக் கக்குதல் உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை மையப்படுத்தியே குறித்த பிரேரணை அதிஉயர் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. சஜித் அணியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலரே இதற்கான நகர்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்கூட விமலை விளாசித் தள்ளுவதால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவில் நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும், அவ்வாறு முடியாமல்போனால் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துக்காவது சவால் விடுக்கலாம் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் தற்போதைய அரசு பல வழிகளிலும் இறுகியுள்ளது. அரசுக்கு ஆலவட்டம் பிடித்த அமைப்புகள்கூட அதன் செயற்பாடுகளை சரமாரியாக விமர்சித்துவருகின்றன. அதுமட்டுமல்ல பௌத்த தேரர்கள்கூட வெளிப்படையாகவே சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். மறுபுறத்தில் அரச கூட்டுக்குள்ளும், வெளியிலும் பிரச்சினைகள் தலைவிரித்தாட தொடங்கியுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தால் பொதுவான பிரச்சினைகள் திசைதிருப்பப்படக்கூடும் எனவும், பிளவுபட்டுள்ள அரச கூட்டணி ஐக்கியமாகக்கூடும் எனவும், அது வருகின்ற தேர்தலில் அரசுக்கும், விமலின் கட்சிக்குள் சாதகமாக அமையக்கூடும் எனவும் பின்வரிசை எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்பட்டுள்ளது. எனினும், அரசுக்கு எதிராக பல வழிகளிலும் போராடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.