” விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்த துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். எவராவது மரணித்தால் சவப்பெட்டி வாங்குவதற்குகூட திண்டாடவேண்டியுள்ளது. அவர்கள் இவ்வாறு துன்பப்படுகையில் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் விமல் கருத்து வெளியிடுகின்றார்.
விமல் வீரவன்சவின் வீட்டிலுள்ள நாயை பராமரிப்பதற்குகூட மாதமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா செலவிடப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிடுகின்றார்.
கொழும்பு மாநகரசபைக்கு சைக்கிளில் வந்த அவர் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு இன்று கோடிஸ்வரர் ஆகியுள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் விமலுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்.” – என்றார்.