” சஜித் பிரேமதாச விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறுவரும்போது அவர் மக்களிடம் மன்னிப்பு கோருவார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை, மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு வருகை தருவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த சஜித், இறுதி நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதனால் வடிவேல் சுரேஷ் கடுப்பானார். பதுளை, மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் மே தின உரையின்போதும்,
” பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை.” – என வடிவேல் சுரேஷ் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரை அவர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வடிவேல் சுரேஷ்,
” நடந்த சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டார். விரைவில் பசறை, லுணுகலை, மடுல்சீமை பகுதிகளுக்கு வருவார். மக்களுடன் கலந்துரையாடுவார். நான் எனது மக்களின் பிரதிபலிப்பையே வெளிப்படுத்தினேன்.” – என்றார்.