மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ” விலங்கு தெறிக்கும் ” திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும் திரையிடப்பட்டிருந்தது
Danyman production டனேஷ் ராஜ் இன் தயாரிப்பில்
முல்லைத்தீவு மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜா வின் கதை, திரைக்கதை,இயக்கத்திலும் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ணபிள்ளை மிரட்டலாக இசையமைத்திருக்கிறார்.
“விலங்கு தெறிக்கும் ” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர்களாக டருண் பாஸ்கர் மற்றும் அருள் செல்வம் ஒளிப்பதிவு செய்ய நூறிற்கு மேற்பட்ட நடிகர்கள் பட்டாளமே இதில் நடித்திருக்கிறார்கள்.
அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பத்திற்கான நடிப்பை சிறப்பாக செய்திருக்கும் அதேவேளையில் அனைவருமே அவர்களின் கதாப்பத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தார்கள்.
திரைப்படத்தின் ஆரம்பமே முள்ளிவாய்க்கலில் இருந்து தொடங்குகிறது . பெரிய திரைக்கதையைஆரம்ப புள்ளியில் இருந்து சரியாக நகர்த்தும் யுக்தியை சிறப்பாக இயக்குநர் பிரகாஷ் ராஜா கையாண்டுள்ளர்.
அடுத்தடுத்து திரைக்கதை வேகமெடுக்க ஆரம்பிக்கிறது . திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் கதாநாயகன் பின் திரைக்கதையில் கிட்டத்தட்ட 25 ஆவது நிமிடத்தில் மீண்டு வருகிறார் அதற்கிடையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நிகழ்கால பிரச்சனைகளை எடுத்து காட்டியிருக்கிறார் .
கதாநாயகனாக வரும் டனேஷ் ராஜ் உண்மையில் கதையின் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் விறைப்பான முகத்தோடு வருபவர் பின் தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பது தெரியாமல் பரிதவிக்கும் போதும் பின் அநியாயங்களை அழிக்கும் போதும் ஒரு கதையின் நாயகனாக இனியன் கதாப்பாத்திரத்தை பார்வையாளர்களோடு ஒன்றித்து பயணிக்க வைக்கிறார். அதே போல சக நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருந்தார்கள்.
திரைப்படத்தின் முற்பகுதியில் அமீர் கதாப்பாத்திரத்தில் வருபவர்கள் அவ்வப்போது வந்து பயமுறுத்துகிறார். அதே போல கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் விழி இதுதான் அவரின் முதல் திரைப்படமென்று தெரியாத அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருந்தார் .
இந்த திரைப்படத்தின் இன்னொரு பலம் அதன் பாடல்கள். தாரு, கனகேஷ்வரி சசிக்குமார் ,சசிக்குமார் சார்மிகா மற்றும் சந்தோசினி ஆகியோர் தங்களின் குரலால் படல்களுக்கு வலுச் சேர்த்திருக்க பாடல் வரிகளை ரொபின் ரொனால்ட்,சாந்தகுமார் மற்று தாரு ஆகியோர் எழுதியிருக்கிறார்கள் உண்மையில் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா பாடல்களுக்கு கொஞ்சமும் சளைக்காமலேயே இருக்கிறது.
முன்னர் கூறியதைப் போல இசையமைப்பாளர் தனக்கு கொடுக்கப்பட பணி மிக மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அடுத்து இந்த திரைப்படத்தின் வசனங்கள் ” ஊருக்குள்ள கஞ்சா கசிப்பு வருமட்டும் பாத்துக் கொண்டிருக்க வேண்டியது,பிறகு கொடிய தூக்கிற்று வர வேண்டியது ” என்று அரசியல்வாதிகளுக்கு செருப்படி கொடுக்கவும்
” அவ்வளவு தான்ல, அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறைக்கு எண்டு காத்தோட கலந்து போனவங்கட ஆத்மா கூட உங்கள சும்மா விடாது ” என்கிற மனக்குமுறலும் ” தோத்திட்டம் தோத்திட்டம் ஆமாடி தோத்துத்தான் போனோம் செத்தா போயிற்றம் இல்லைத்தனே ” என்கிற கொலின் ஹஜனியின் வசனமும் இன்னும் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
அத்தோடு திரைப்படத்தின் எடிட்டர் தனுசன் செல்வராசாவும் Vfx & color grading செய்திருக்கும் நிவேன் சந்திரசேகர் சிறப்பாக தங்கள் பங்கிற்கு திரைப்படத்திற்கு வலுச்சேர்த்திருக்கிறார்.
அதே போல திரைப்படத்தின் பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஸ் நவரத்தின ராஜாவும் தன் பங்கிற்கு நடிப்பில் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.
கடந்த வாரம் இந்த திரைப்படம் கொழும்பில் சங்கவி பிலிம்ஸ் ஏற்பாட்டில் மருதானை சினிசிற்றி திரையரங்கில் திரையிடப்பட்டு கொழும்பு வாழ் மக்களினதும் அமோக ஆதரவை பெற்றிருந்தது. இதில் கொழும்பைச் சேர்ந்த ஜனா, ஆர்டிகே, பிரேம்ஜித், நிசான் ஆர்கே, ராம்வேல் போன்றவர்களும் நடித்திருந்தார்கள் .
” விலங்கு தெறிக்கும் ” உண்மையில் அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமென்றால் நிகழ்கால மாபியாக்களுக்கு ஒரு சாட்டையடி “விலங்கு தெறிக்கும் ”
எதிர்வரும் நாட்களில் இத் திரைப்படம் இலங்கை முழுவதும் திரையரங்குகளில் ஒரேநேரத்தில் வெளியாகவுள்ளது.