வீடுகள் இடிப்பு: மலையகத் தமிழ் குடும்பங்கள் நிர்க்கதி

தனியார் காணியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மலையகத் தமிழ் குடும்பங்கள் சில, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தங்களது வீடுகளைத் திடீரென இழந்துள்ளதால், வாழ்விடங்களை இழந்து பெரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்லை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பத்கொடை, இலக்கம் 6 தோட்டத்தில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த 11 மலையகத் தமிழ் குடும்பங்களில், ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நீதிமன்ற உத்தரவால் தங்களது வீடுகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இரண்டு வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளதுடன், மேலும் நான்கு வீடுகள் இடிக்கப்படவுள்ளன. வாழ்வதற்கு இடமின்றித் தவிக்கும் மக்கள், தங்களுக்கு வீடுகளை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுமார் 65 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பத்கொடை இலக்கம் 6 தோட்டம் தனியார் காணியாகும். தற்போது குமாரி திசாநாயக்க என்பவருக்குச் சொந்தமான இந்தத் தோட்டத்தில், 1930ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூன்று லயன் குடியிருப்புகளில் கடந்த காலங்களில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வந்தன.

தோட்ட நிர்வாகத்தினால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக அங்கு வாழ முடியாத சூழ்நிலை உருவானதைத் தொடர்ந்து, சில குடும்பங்கள் படிப்படியாகத் தோட்டத்தை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது அங்கு 11 குடும்பங்கள் மாத்திரமே வசித்து வருகின்றன.

நீதிமன்ற உத்தரவின் மூலம் ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய, 2026 நவம்பர் 5ஆம் திகதி இரண்டு வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய நான்கு வீடுகளும் இடிக்கப்படவுள்ளன.

தாம் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்ட பின்னர், தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி உறவினர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ள எஸ். விஜயகுமாரி என்ற தாய், பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

“எங்களுக்கு வாழ்வதற்கு இடமில்லை. இன்று பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நிற்கின்றோம். எந்தவிதமான முன் அறிவித்தலும் வழங்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்னராவது அறிவித்திருந்தால் ஏதாவது செய்திருப்போம். இப்போது திடீரென வந்து எங்கள் வீடுகளை இடித்துவிட்டார்கள். எனக்கு வயது 69. என்னுடைய தந்தை பிறந்ததும் இங்குதான். நானும் பிறந்தது இங்குதான். இந்தத் தோட்டத்தில்தான் வேலை செய்தேன். இன்று வாழ்வதற்கு வீடின்றி நிற்கின்றேன்.”

தோட்டக் குடியிருப்புகளில் வாழ்ந்த 11 குடும்பங்களில் ஐந்து குடும்பங்கள் தொடர்ந்து அங்கு வசிப்பதற்கு தோட்ட உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடிக்கப்படவுள்ள நான்கு வீடுகளில் ஒன்றில் வசிக்கும் ரவிச்சந்திரன் தயாளன், மலையக இளைஞர்களும் யுவதிகளும் விளையாடி வந்த மைதானத்தில் தோட்ட உரிமையாளர் தேயிலைச் செடிகளை நட ஆரம்பித்த பின்னரே தோட்ட மக்களுக்கும் காணி உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினைகள் ஆரம்பமானதாகத் தெரிவிக்கின்றார்.

“தனியார் நிறுவனம் ஒன்றே இந்தத் தேயிலைத் தோட்டத்தைப் பராமரித்து வந்தது. 2021ஆம் ஆண்டு குமாரி திசாநாயக்க என்பவர் இந்தத் தோட்டத்தை வாங்கிய பின்னர்தான் பிரச்சினை ஆரம்பமானது. முதலில் இங்கு விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அதில் தேயிலைச் செடிகளை நட ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் 11 குடும்பங்கள் விவசாயம் செய்த காணிகளிலும் தேயிலைச் செடிகளை நட ஆரம்பித்தார்கள். அந்தக் காணிகள் அனைத்தையும் சேர்த்தால் சுமார் நான்கு அல்லது ஐந்து ஏக்கர் இருக்கும்.”

இந்த விடயம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் ஆரம்பத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், 2021ஆம் ஆண்டு பிரச்சினைகள் ஆரம்பமான பின்னர் தமது குடியிருப்பு உரிமையைப் பாதுகாக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட குடும்பங்களே பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் ரவிச்சந்திரன் தயாளன் தெரிவிக்கின்றார்.

மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வீடுகளில் தொடர்ந்து வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், மரக்கறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கோரியிருந்ததாகக் குறிப்பிடும் அவர், எனினும் வழக்கை முறையாகத் தொடர்ந்து நடத்திச் செல்லத் தங்களால் முடியாமல் போனதாகவும் தெரிவிக்கின்றார்.

“எங்களால் அந்த வழக்கைச் சரியாக நடத்திச் செல்ல முடியவில்லை. சட்டத்தரணிகளும் எங்களுக்கு முறையாக உதவவில்லை. அவர்களாலும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று கூறி, ஆவணங்களையும் கோப்புகளையும் எங்களிடமே மீண்டும் ஒப்படைத்தார்கள். எங்களிடமும் பணம் இருக்கவில்லை. என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.”

எவ்வாறாயினும், தோட்ட உரிமையாளரான குமாரி திசாநாயக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போது தங்களது வீடுகளை இழக்க நேரிட்டுள்ளதாக ரவிச்சந்திரன் தயாளன் மேலும் குறிப்பிடுகின்றார்.

“நாங்கள் சட்டவிரோதமாகக் குடியிருப்பதாகவும், காணி தனக்குச் சொந்தமானது என்றும் கூறி தோட்ட உரிமையாளர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் இது நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு முடிவடைந்தது. தீர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பாக எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.”

நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக வலியுறுத்தும் தயாளன், வாழ்வதற்கு வீடின்றி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தமக்கும் ஏனைய குடும்பங்களுக்கும் அரசாங்கம் வீடுகளை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றார்.

“நீதிமன்றத் தீர்ப்பை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த இடங்கள் தனியார் காணிகளாக இருக்கலாம். ஆனால், மூன்று தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்த வீடுகள் இப்போது எங்களிடம் இல்லை. நாங்கள் எங்கே செல்வது? வாழ்வதற்கு இடமில்லை. வாழ்வதற்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொடுப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு அல்லவா? எங்களுக்கு வாழ்வதற்கு ஒரு வீடு வேண்டும்.”

எதிர்காலத்தில் இடிக்கப்படவுள்ள தாம் வசிக்கும் வீட்டைப் புனரமைப்பதற்காக ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிடும் ரவிச்சந்திரன் தயாளன், தமது குடும்பத்தைப் போலவே ஏனைய குடும்பங்களும் வீடுகளைப் புனரமைப்பதற்காக இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

“நாங்கள் சுமார் 12 இலட்சம் ரூபாய் செலவழித்து எங்கள் வீட்டை புனரமைத்தோம். நாங்கள் மட்டுமல்ல, இங்கு வசிக்கும் மற்றவர்களும் இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து தங்களது வீடுகளைப் புனரமைத்துள்ளனர். அவற்றில் இரண்டு வீடுகள்தான் இடிக்கப்பட்டுள்ளன.”

தோட்டத்தில் அமைந்துள்ள சைவ ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குக்கூட தோட்ட நிர்வாகம் தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதற்கிடையில், ஹல்தும்முல்லை பிரதேச சபையின் சில உறுப்பினர்கள், தமது கிராமத்திற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டடம் ஒன்றில் தங்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும், எனினும் அந்தப் பாடசாலைக் கட்டடம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதுடன், ஏனைய நான்கு குடும்பங்களும் இடிக்கப்படவுள்ள வீடுகளில் உள்ள தங்களது பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles