வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்றும் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு : தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடு குறித்து சர்ச்சை
நுவரெலியா, களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் லவர்ஸ்லீப் தோட்டத்தில், வீடு அமைப்பதற்கு தோட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று அத்திவாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வீட்டின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க தோட்ட நிர்வாகம் தடையினை ஏற்படுத்தியுள்ளதாக வீட்டு உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த காணியில் வீடு அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியதாகவும், அதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர் வீட்டுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்திவிட்டு வெளிநாடு சென்றதாகவும், அங்கு பணிபுரிந்து பெற்ற பணத்தை பயன்படுத்தி மீண்டும் தனது வீட்டின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
” வீடு கட்டுவதை நிறுத்துமாறு உங்கள் அம்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது.” என சம்பவ இடத்துக்கு வந்த உதவி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். ஆதாரம் காட்டுவதற்கு தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், லவர்ஸ்லீப் தோட்டத்தின் பிரதி முகாமையாளர் மற்றும் தோட்ட மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று, தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வீடு அமைக்கப்படுவதாகக் கூறி நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக வீட்டு உரிமையாளர் தரப்பு தெரிவிக்கிறது.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தகராறின் போது, “கள்ளத்தோணி” என அவமதிக்கும் வகையில் நிர்வாக தரப்பு கூறியது என வீட்டு உரிமையாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் தகவல்கள் சமூக ஊடகங்களில் தற்போது பரவியுள்ளது.
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் காணி, வீட்டு உரிமை, மனித கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு – சம்பவம் தொடர்பில் உதவி முகாமையாளர் அல்லது தோட்ட நிர்வாகத்தின் சார்பில் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டால் அதனையும் பதிவிடுவதற்கு தயாராகவே உள்ளோம்.










