அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தேர்தல் முடிவுகள் பற்றி பேசுகையில் தனது கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி நிலவரம் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வாக்குப்பதிவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் முடிவுகள் அறிவிக்கும் நேரமும் மாறுபடுகிறது.
இருவரும் கிட்டத்தட்ட சம அளவிலான மாநிலங்களில் வென்றுள்ளனர். இதனால் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் போட்டி உள்ள மாநிலங்களின் முடிவைப் பொருத்து வெற்றி நிலவரம் அமையும்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஜோ பைடன் டெலாவரில் உரையாற்றினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், முழு முடிவுகள் வரும் வரை கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
‘நாம் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறம். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், இனி எதிர்க்கட்சிகள் இனி ஓட்டுபோட்டு வெற்றி பெற முடியாது. இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன்’ என்றும் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.
ஆனால் டிரம்பின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.