வெலிமடையில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நால்வர் கைது!

வெலிமடை நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கினர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7:30 மணியளவில், வெலிமடை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை சோதனைக்கு உட்படுத்தியபோது, கெப் வாகனத்தில் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தில் இருந்தவர்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, கெப் வண்டியில் இருந்தவர்கள் பொலிஸ் சார்ஜென்டை தாக்கிவிட்டு கெப் வண்டியுடன் தப்பிச் செல்ல முற்பட்டதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன தெரிவித்தார்.

வெலிமடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கெப் வண்டியையும், நிலையத்திற்கு வந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன், அங்கிருந்த மேலும் இரு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரும் இன்று (12) பிற்பகல் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பொலிஸார் அவர்களை கைது செய்ததாகவும் அவர்கள் வெலிமடை மற்றும் ஊவா பரணகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles