‘வெளிநாடு சென்றுள்ள இளைஞர்களுக்கு மலையகத்திலேயே வேலைவாய்ப்பு’

” வெளிநாடுகளில் தொழில்புரியும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு மலையகத்திலேயே தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் “ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் 2020” என்ற செயல்திட்டத்தின்கீழ் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜீவன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் அரசியல் செயற்திறன் மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் நோக்கிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கை பராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இளம்  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு விசேட குழுநிலை விவாத கலந்துரையாடல் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

” மலையகத்தில் இளைஞர்களின் விளையாட்டுதுறையை மேம்படுத்த வேண்டும். மிக திறமையான இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். அத்தோடு மலையகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரியும் அனைவருக்கும் மலையகத்திலேயே தொழில் வாய்ப்பை பெற்றுதரவேண்டும்.

மலையகத்தின் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவும் மலையத்தில் கல்வி துறையை முன்னோக்கி கொண்டுசெல்லவும் வேண்டும். அதற்காக மலையகத்திற்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.” – என்றார்.

இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், இளைஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles