ஹட்டன் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லொறி ஒன்று மரத்தில் சிக்கிய நிலையில் இன்று (10) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் ரொதேஸ் (Rothes) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த லொறி, நேற்று (09) மாலை சுமார் 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. லொறியின் உரிமையாளர் இன்று அதிகாலை அதனை மரத்தில் சிக்கிய நிலையில் கண்டுபிடித்துள்ளார்.
இதற்கிடையில், ஹட்டனில் இருந்து மகாவலி கங்கைக்கு நீர் பாயும் பிரதான ஆறான ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததால், ரொதேஸ் பகுதியின் தாழ்நிலங்களில் அமைந்துள்ள சுமார் 50 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தற்போது வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில், வீடுகளில் தேங்கியுள்ள நீர் மற்றும் சேற்றை அகற்றும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அனர்த்தத்தால் பெருமளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட உடமைகள் சேதமடைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
