நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இப்போராட்டம் நடைபெற்றது.
எனினும், போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் , ஒலிபெருக்கி அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற ஏற்பாட்டாளர்கள், பொலிஸாருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் பொலிஸார் குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ள அனுமதியளித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் குறித்த இடத்தில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
கையெழுத்து போராட்டத்தில் மத தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கையொப்பங்களை பதிவுசெய்கின்றனர்.
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.










