அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமாருக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
இறக்குவானை சூரியகந்த பகுதியில் நேற்று எஸ்.ஆனந்தகுமாரை சந்தித்த, அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சியின் தலைவர் இராஜரட்ணம் பிரகாஷ், தனது ஆதரவை வழங்கினார்.
இரத்தினபுரி மாவட்டம் மலையகத்தின் ஒரு பகுதி என்பதை தமிழ் அரசியல்வாதிகள் மறந்துள்ளதாக கூறிய இராஜரட்ணம் பிரகாஷ், ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தமது கடமைகளை மறந்து செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
மலையகத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கவலை வெளியிட்டார்.
இரத்தினபுரியில் போட்டியிடும் ஏனைய தமிழ் வேட்பாளர் தமிழர்களை ஏமாற்றிய கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றமையினால், அவர் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை இனியும் தாம் நம்ப தயார் இல்லை என கூறிய இராஜரட்ணம் பிரகாஷ், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி நேரயாக தமிழர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளமையினால், எதிர்வரும் காலங்களில் இரத்தினபுரி தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் திட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தாம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமாரின் வெற்றியை உறுதி செய்ய இனிவரும் காலங்களில் உழைப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, இறக்குவானை – சூரியகந்த பகுதிக்கு விஜயம் செய்த எஸ்.ஆனந்தகுமாருக்கு மக்கள் பெருமளவிலான ஆதரவை வழங்கியிருந்தனர்.
புதிய எண்ணங்களுடன் களமிறங்கியுள்ள தமிழருக்கு தாம் ஆதரவு வழங்க தயார் எனவும் கூறியிருந்தனர்.
பெரும்பான்மை சமூகத்தின் முறையற்ற செயற்பாடுகளிலிருந்து தம்மை பாதுகாக்க உதவுமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த எஸ்.ஆனந்தகுமார், இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தான் முன்னின்று செயற்படுவதாகவும் உறுதியளித்திருந்தார்.