எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார்.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நவ. 21 இல் திரைக்கு வருகிறது.
இதையொட்டி படம் பற்றிய பேசிய கீதா கைலாசம், “இப்படம் அம்மா மகன் பற்றிய கதையைப் பேசுகிறது. இதில் ரவிக்கை அணியாமல் சுருட்டுப் பிடித்தபடி நடித்துள்ளேன். கதாபாத்திரத்துக்காக சுருட்டு மற்றும் பீடி புகைக்கப் பயிற்சி எடுத்தேன். முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி செய்தால் பழக்கமாகிவிடும் என்று எச்சரித்ததால் அதைப் படப்பிடிப்பில் மட்டுமே பயன்படுத்தினேன். ரவிக்கை அணியாமல் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சுருட்டு பிடித்தபடி கிராமத்துச் சாலையில் டிவிஎஸ் 50 ஓட்டி சென்றது சவாலாக இருந்தது.
சிறுவயதில் இருசக்கர வாகனம் ஓட்டி இருந்தாலும் இப்போது பதற்றமாக இருந்தது. இப்படம் திருநெல்வேலி மாவட்டத்தின் கதையாக உருவாகி இருக்கிறது. நெல்லை பேச்சு வழக்கை, முயற்சி செய்திருக்கிறேன். படப்பிடிப்பு பத்மநேரி கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மனிதர்களிடம் பழகியது புதிய உணர்வை கொடுத்தது” என்றார்.
