இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு விட்டதன் பின்னணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாகவும் அதற்கான அனுமதியை மத்திய அரசு தர வேண்டுமெனவும் தமிழக சட்ட சபையில் பிரேரணை முன்வைத்து அதனை நிறைவேற்றி உள்ளார்.
தற்போது அனைவரும் செய்ய வேண்டிய விடயம், இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வரினுடைய கோரிக்கைக்கு அனுமதி அளிக்குமாறு கேட்பதாகும்.
ஆனால் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருக்கும் அண்ணாமலை இலங்கை வருவதற்கு முன்னர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மக்களுக்கு உதவி என்ற பெயரில் தமிழக முதல்வர் அரசியல் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.
அவருடைய அறிக்கையில் மத்திய அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு நாங்கள் இது தொடர்பான அழுத்தங்களை கொடுப்போம் போன்ற எந்த விதமான கருத்துக்களும் இருக்கவில்லை. மாறாக இந்த உதவிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற பின்புலத்தில் இதனை அரசியல் மயப்படுத்தும் ஒரு கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் வந்து அவர் கலந்துகொண்ட நிகழ்விலும் கூட இந்த உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் அல்லது அழுத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எந்த விதமான கருத்துக்களை முன்வைக்கவில்லை.
தமிழகத்தில் தமிழக முதலமைச்சரை தொடர்ச்சியாக எதிர்த்து கருத்து வெளியிடுவது போலவே இலங்கை வந்தும் ஸ்டாலினை குறை கூறுவதையே அண்ணாமலை செய்துள்ளார்.
ஒருபுறம் தமிழக முதல்வரின் உதவிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்து ஊடக அறிக்கை விடுத்துவிட்டு மறுபுறம் தமிழக முதல்வருக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணாமலை என்ற நபரை அழைத்து வந்து மேடையில் நாடகம் ஆடுவது எந்த வகையில் நியாயமாகும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் அதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியிலிருந்து கவிழ்க்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் அண்ணாமலையை இலங்கை அழைத்து வந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி உள்ளமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது சந்தேகத்தை ஏற்பட்டுள்ளது .
பாரதிய ஜனதா கட்சி இலங்கை மத்திய அரசாங்கத்துடன் அதாவது ராஜபக்சேக்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொண்டு செயல்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ராஜபக்சக்களின் உறவை முறித்துக் கொள்வதாக அறிவிக்கிறது.
அவ்வாறு அறிவிப்பு விடுத்த மேடையில் ராஜபக்சக்களுடன் நெருங்கி செயல்படும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியஸ்தர் அண்ணாமலை இருக்கிறார்.
எனவே இந்த விடயங்களை வைத்து பார்க்கும் போது தமிழக முதலமைச்சர் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதை ஏதேனும் ஒரு வகையில் தடுக்கும் விதமாக சதித் திட்டம் ஒன்றை அண்ணாமலையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து முன்னெடுத்துள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதனால்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்ணாமலையை இலங்கைக்கு அழைத்து வந்து தங்களுடைய மேதின மேடையில் அமர வைத்தது, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு வழங்க முன்வந்துள்ள உதவியை பெற்றுக் கொடுக்கவா? அல்லது தட்டிக் கெடுக்கவா? என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
– மலையக மைந்தன்










