தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வந்தது. இந்த சூழலில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
“இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 பேரில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மொத்தம் 30 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு. உருமாறிய கொரோனா பற்றிய தகவலை கேட்டு பதட்டமடைய வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம்” என்று தெரிவித்தார்.