அமெரிக்காவின் பயணத்தடை குறித்து ஈரான் கடும் சீற்றம்!

ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் புதிய பயண தடை உத்தரவு வரும் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதனை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

“ அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடையே இருக்கும் மேலாதிக்க மற்றும் இனவெறி மனநிலையின் தெளிவான அடையாளம் இது. இந்த முடிவு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ஈரான் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த விரோதப் போக்கைக் காட்டுகிறது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை இது மீறுகிறது. கோடிக்கணக்கான மக்கள், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதன் அடிப்படையில் பயணிக்கும் உரிமையை இது பறிக்கிறது. இந்தத் தடை பாரபட்சமானது. தடைக்கான காரணம் பற்றி விரிவாகக் கூறாமல் தடை விதித்திருப்பது, அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேசப் பொறுப்புக்கூறலை கேள்விக்கு உட்படுத்துகிறது” எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானும் அமெரிக்காவும் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டன. அதுமுதல், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்கள், அதிகமாக இருப்பது அமெரிக்காவில்தான். அதுதான் அவர்களின் தாயகமாகும். ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 15 லட்சம் ஈரானியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles