அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்படுவாரா விமல் வீரவன்ஸ?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.  நாளாந்தம் உக்கிரமடைந்தே வருகின்றது. இதனால் விரைவில் விரிசலொன்றுக்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஆரம்பமான சர்ச்சை, மொட்டுக்கூட்டணியை வாட்டி வதைத்துவரும் நிலையில், மொட்டு கட்சியின் தலைமைத்துவம் குறித்து விமல் வெளியிட்ட கருத்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து  மஹிந்தவை நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு கோட்டாபய நியமிக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிடுவதற்கு விமலுக்கு என்ன அருகதை உள்ளது என மொட்டு கட்சி உறுப்பினர்கள் வினா தொடுத்து, விமலை சரமாரியாக விளாசித்தள்ளிவருகின்றனர்.

பஸில் ராஜபக்சவே இதன் பின்னணியில் செயற்படுகின்றார். விமல்வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் பஸிலுக்கு எதிராக செயற்படும் நிலையிலேயே இருவரின் தலைகளும் குறிவைக்கப்பட்டுள்ளன.  பஸிலின் சகாக்களின் சொற்கணை தொடுப்பால் விமலும், கம்மன்பிலவும் கதிகலங்கி நிற்கின்றனர். ஆனால் ஊடகங்களின் முன்னால் மட்டும் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர்.

அவர்கள் பம்பினால்கூட மொட்டு அணியினர் ஓயவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து விமலுக்கு எதிராக முறையிட்டுள்ளனர். சுமார் 43 எம்.பிக்கள் இணைந்தே விமல், கம்மன்பில ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைத்துள்ளனர்.

“ மொட்டுடன் இணைந்து தேர்தலில் வென்றுவிட்டு இவ்விருவரும் மக்கள் மத்தியில் நாயகர்களாகுவதற்கு அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர். கூட்டு பொறுப்பை மீறுகின்றனர். இதற்கு இடமளிக்ககூடாது. இவ்விருவரையும் அமைச்சரவையில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேற்றுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் விமர்சனங்களை நிறுத்த சொல்லுங்கள். இல்லையேல் பொதுவெளியில் விமர்சிக்கவேண்டிய நிலை எமக்கும் ஏற்படும்.” என மேற்படி எம்.பிக்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

Related Articles

Latest Articles