பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சங்கத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது வஞ்சிக்கபடாமல் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். அதேபோல தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான தொழில் சலுகைகளும், நலன்புரி விடயங்களும் வழங்கப்படவேண்டும்.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என வலியுறுத்தி பல சுற்று பேச்சுகள் நடைபெற்றன. எனினும், அவை வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிட்டது. தற்போது சம்பள நிர்ணயச்சபை ஊடாக சம்பள உயர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் ஆளுந்தரப்பில் கூறப்படுகின்றது.
குறிப்பாக ‘ஆயிரம் ரூபாவரை’ என்ற சொற்பதம்மூலம் அடிப்படை சம்பளம் ஆயிரம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்ல சம்பள நிர்ணயச்சபை தலையிட்டுள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள இதர சரத்துகளுக்கு பொறுப்புக்கூறவேண்டியது யார் என்ற வினாவும் எழுகின்றது.
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லாவிட்டால் கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடும். 10 நாட்கள் வேலை வழங்கலாம். தொழில் சுமைகளைத் திணிக்கலாம். எனவே, சம்பள உயர்வு வழங்கப்படும் அதேவேளை தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகள் என்பனவும் உறுதிப்படுத்தப்படவேண்டும். நலன்புரி விடயங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அரசனை நம்பி புருஷனை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. சம்பள நிர்ணயசபையைக்காரணம்காட்டி, எமது மக்களின் தொழில் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது, சுமைகள் திணிக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றோம்.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்பதுடன் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கான சலுகைகளும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதனை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” என்றார்.