ஜனாதிபதித் தேர்தலின்போது மிளகு உற்பத்தியாளர்களுக்கு உறுதிமொழி வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது மௌனம் காப்பது ஏன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் கேள்வி எழுப்பினார்.
நுவரெலியா மடுள்ள பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டில் மிளகு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்ளை கைவிடமாட்டார் என்றும், மிளகுக்கு சிறந்த விலை வழங்கப்படும் எனவும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். ஆனால், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. இதனால் மிளகு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நவீன் திஸாநாயக்க அமைச்சராக இருந்தபோதுகூட இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தற்போதும் அதே நிலைமை நீடிக்கின்றது. அதேபோல் மரக்கறி உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் இல்லை. இந்நிலைமையை எமது ஆட்சியில் மாற்றியமைப்போம். விவாசாயிகளை பாதுகாப்போம்.” – என்றார்.