” நாட்டை உரிய வகையில் நிர்வகிக்க முடியாவிட்டால், இந்த அரசு பதவி விலகி – பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
” தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தலைவர்கள் அல்ல, வேலைத்திட்டங்களே அவசியமாக உள்ளன. மக்களை தியாகம் செய்யுமாறு கூறிவிட்டு, ஆட்சியாளர்கள் சுகம் அனுபவித்தால் அதனை அனுமதிக்க முடியாது.
தற்போதைய அமைச்சரவை தோல்வி கண்டுள்ளது. அமைச்சரவை தோல்வியெனில் முழு நாடும் தோல்விதான். எனவே, துறைசார் அனுபவம் உள்ளவர்களை அந்தந்த அமைச்சு பதவிக்கு நியமிக்குமாறு வலியுறுத்துகின்றேன்.
அவ்வாறானவர்களை நியமித்து, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அரசுக்கு இந்த நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால், பதவி விலகி – தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். அப்போது நாட்டை நிர்வகிக்கக்கூடியவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்பார்கள்.” – என்றார்.
