அரச வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்தல் தொடர்பில் நவீன கணினிக் கட்டமைப்பைத் தயாரிக்க குழு!

அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்ததலுடன் தொடர்புடைய சகல அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக, பிரதமரின் செயலாளரின் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் வழிவகைகள் பற்றிய குழு ஆகியன இணைந்து நடத்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதி, நிதி அமைச்சு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாவர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவண்ண மற்றும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கமைய, தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரு வாரத்திற்குள், பூர்வாங்கக் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும், மே 15ஆம் திகதி கோபா குழுவின் முன் அடிப்படைத் திட்டங்களை முன்வைத்து அதற்கான அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் தொழில்நுட்பக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை ஒவ்வொரு மாதமும் இது குறித்து முன்னேற்ற ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் வருமானத்தை சேகரிப்பது, மேம்படுத்துவதுடன் தொடர்புபட்ட சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்துக் கணினிக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு 2016ஆம் ஆண்டில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்ற போதும் இது நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் கோபா குழுவின் தலைவர் அதிருப்தியை வெளியிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தில் பொருளாதார நெருக்கடியை தீர்த்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முறையான கணினி அமைப்பை தயாரிப்பது இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரவணக்க குறிப்பிடுகையில், தேவையான தொழில்நுட்பப் பின்னணி, அதற்கான அதிகாரங்களை உரிய நிறுவனங்களுக்கு எந்தளவிற்கு வழங்க வேண்டும் என்பதை ஆராய்ந்து உறுதியான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Articles

Latest Articles