அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதிலும் குறைந்த வருமானம் பெறும் 2.74 மில்லியன் குடும்பங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்படும். இத்திட்டத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவீனம் 4,679 மில்லியன் ரூபாவாகும். இரு மாதங்களுக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க 54,800 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படும். சிறு ஆலை உரிமையாளர்களிடமிருந்து தேவையான அரிசி தொகை கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண திட்டத்துக்குரிய நிதி திறைசேரியில் இருந்து வழங்கப்பட்டுவருகின்றது. அரிசி பங்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும், இதற்கான நிதி வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.  இத்திட்டம் தொடர்பில் அரசுக்கு முன்கூட்டியே சிந்தனை இருந்திருப்பின்,   கடந்த அறுவடையின்போது நெல் விநியோக சபை ஊடாகவேனும் நிவாரணத்திட்டத்துக்குரிய அரசியை சேகரித்திருக்கலாம்.

ஜனாதிபதியின் உரை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி நிவாரணம் வழங்கும் 2024 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியும் பங்கேற்றார்.

பதுளை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 191,548 பயனாளி குடும்பங்கள் அரிசி மானியம் பெறத் தகுதி பெற்றுள்ளன. ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் அடையாளமாக   25 பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் கைகளால் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,

“ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் கடினமான காலங்களில் கஷ்டப்பட்டோம். இன்று நாடு அபிவிருத்தியடைந்து வருகின்ற போதிலும் ஒரு பிரிவினர் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி , தொழிற்துறை வீழ்ச்சி, வேலை இழப்பு போன்ற காரணங்களால் இன்னும் பலர் சிரமத்தில் உள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியின் பயனை அனைவரும் பெற வேண்டும். எனவே, அஸ்வெசும திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலனை மூன்று மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் தமிழ், சிங்கள, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த அரிசியை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து வாங்கவில்லை. சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து இவற்றை வாங்கும் போது சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அப்போது அந்த சிறு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.” – என்று குறிப்பிட்டார்.

அரிசி ஏன் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டது?

இந்த அரிசி விநியோகத் திட்டத்தால் குருணாகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பயன்பெற்றுள்ளனர். 2 லட்சத்து 83 ஆயிரத்து 13 குடும்பங்களுக்கு அரிசி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக திறைசேரியால் 537 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 892 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இதற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் ரூபாவாகும். கம்பஹா மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 623 குடும்பங்களுக்கு அரிசி பகிரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கூறியதுபோல அதே பகுதியில் உள்ள சிறு ஆலை உரிமையாளர்களிடம் தேவையான அரிசியை  கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது சிறந்த விடயம். ஆனால் சந்தையில் நிலவும் சில்லறை விலையைவிடவும் கூடுதல் விலைக்கு அரிசி கொள்வனவு செய்யப்படுவதுதான் பிரச்சினைக்குரிய விடயமாகும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு எவ்வாறு இப்படி செய்ய முடியும் என்பது குழப்பமாகவே உள்ளது.

இது தொடர்பில் காலி, மொனராகலை போன்ற பிரதேச செயலகங்களில் பணிபுரியும் பலரிடம் வினவியபோது , பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய மூன்று அதிகாரிகளும் இணைந்தே அரிசி கொள்வனவு செய்ய வேண்டிய ஆலையை தெரிவு செய்கின்றனர் எனவும்  இறுதியாக பிரதேச செயலாளர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்தனர்.

மொனறாகலை மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து ஒரு கிலோ சிவப்பு அரிசி 186 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் அதே சிவப்பு அரிசி ஒரு கிலோவின் சில்லறை விலை பல்பொருள் அங்காடியொன்றில் 168 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது அரிசி ஆலை உரிமையாளர் விரும்பினால் கார்கில்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் அரிசியை வாங்கி, பின்னர் அதனை அரசுக்கு விற்க முடியும் என்பதுபோலல்லவா நிலைமைக் காணப்படுகின்றது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு என்ன நடந்தது?

அரிசியை இவ்வாறு அதிக விலைக்கு வாங்கும்போது அதன்மூலம் விவசாயிகள் நன்மையடைவார்கள் என ஜனாதிபதி கூறி இருந்தார். இது எப்படி சாத்தியம் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. ஏனெனில் கடந்த போகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட அரிசியை சொற்ப விலைக்கே விவசாயிகள், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கினர். அந்தவகையில் அரச அதிகாரிகளுக்கும், கிராமங்களில் உள்ள ஆலை உரிமையாளர்களுக்குமே இதன்மூலம் நன்மை பயக்கும் என்பது தெளிவாகின்றது.

இம்முறை பெரும்போகத்தில் அரசு நெல் கொள்வனவு செய்யும் நடைமுறை என்ன? இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வினவியபோது,  “ நெல் சந்தைப்படுத்தல் சபை இம்முறை நெல் கொள்வனவு செய்யாது என்பதல்ல, விவசாயிகள் எமக்கு நெல்லை வழங்குவதில்லை. அதுவே உண்மை. நாம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தபோது பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிக விலைக்கு நெல்லை வாங்கிவிட்டனர். சிறு தொகையைக்கூட எம்மால் வாங்க முடியாமல்போனது. ஆனாலும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது என்பது விவசாய அமைச்சர் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியளிக்கின்றது.” – என்று பதிலளித்துள்ளார்.

நெல் கொள்வனவு செய்வதற்கு அரசு ஒதுக்கி இருந்த நிதி எவ்வளவு என்ற கேள்விக்கு,
“ 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. எனினும், அந்த தொகைக்குகூட இன்னும் அரிசி வாங்க முடியவில்லை.” என அமைச்சர் பதிலளித்தார்.

இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் அரச களஞ்சியசாலையில் இருந்து அரிசியை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் அல்லவா என அமைச்சரிடம் கேட்டபோது,
“பிரச்சினைதான், ஆனால் என்னால் எதையும் செய்ய முடியாது . அது நாடு பற்றி சிந்தித்து செய்ய வேண்டிய விடயமாகும். இது பற்றி சிந்தித்ததால்தான் நெல் கொள்வனவு செய்வதற்கு நிதி கோரினேன். எனினும், இது விடயத்தில் நீதி அமைச்சு தலையிட்டதால் பணிகளை முன்னெடுக்கமுடியாமல்போனது.  அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.” என்று பதிலளித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தோ அல்லது உண்மையாகவே குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வாறு அரிசி விநியோகிக்கும் எண்ணம் இருந்திருந்தால், அது தொடர்பில் முன்கூட்டியே உரிய வகையில் திட்டமிட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக தேவையான அளவு நெல் கொள்வனவு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறு நிவாரணம் வழங்குவதற்கு தேவைப்படும் அரிசிக்கான நெல்லை அரசு முன்கூட்டியே வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தால் நிதி ரீதியிலான இலாபத்தை பெற்றிருக்கலாம். எனினும், இந்த அணுகுமுறையை அரசு பின்பற்றவில்லை. மாறாக நெல் சந்தைப்படுத்தல் சபையை முடக்கி, ஆலை உரிமையாளர்களிடமிருந்து கூடுதல் விலைக்கு அரிசியை வாங்குவதற்கு அரசு தீர்மானித்தது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இவ்வாறு செய்வது எப்படி? இது பற்றி சிந்திக்க வேண்டும்.

Related Articles

Latest Articles