ஜனாதிபதியான தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட 20 கிலோ அரிசி நிவாரண உதவித்திட்டத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் தகுதியுடைய குடும்பங்கள் என உண்மையான பயன்பெறுநர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களையும் இந்நிவாரணத் திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதியான தங்களின் உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில், நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நிவாரண உதவியாக இலவசமாக 20 கிலோ கிராம் அரிசியை இரண்டு மாதங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்ட மானது வரவேற்கத்தக்கதாகும்.
மேற்படி இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டமானது அஸ்வெசும நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள், அரச நிவாரண உதவிகளைப் பெறுவோர் மற்றும் குறை வருமானம் ஈட்டுவோர் என்ற அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வண்ணம் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
இருந்தபோதிலும் பெரும்பாலான பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உண்மையான பயன்பெறுநர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை அல்லது புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும் கிராமப்புறங்கள் மாத்திரமல்லாது பெருந்தோட்டங்களிலும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் வாழும் மக்களும் இவ்வாறு நிவாரண உதவியை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும் பெருந்தோட்டங்களிலிருந்தும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலிருந்தும் அனேகமான குடும்பங்கள் இந்த நிவாரண உதவியைப்பெற முடியாதுள்ளமை கவலைக்குரியதாகும்.
ஜனாதிபதியான தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்நிவாரணத் திட்டமானது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக பெருந்தோட்டப் மக்களுக்கும் சென்றடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட பயன் பெறுநர்கள் அனைவரும் மேற்படி நிவாரணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு மிகத் தயவாக தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
