நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி மேற்கொண்டு வரும் பிரயத்தனத்தை தமிழ் முற்போக்கு முன்னணிதலைவர் மனோ கணேசன் பாராட்டியுள்ளார். அவருக்கு எதிர் ஆளும் கட்சி பேதங்கள் இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
நிதி அமைச்சர் அலி சப்ரி இடையில் வந்தவர். மக்கள் ஆணையில் அவர் நேரடியாக வரவில்லை. இன்று அவர் அவரால் இயன்றதை செய்கிறார். இன்று ஓடி ஒளிந்திருக்கும் பாவிகள், வாங்கிய கடன்களை சமாளிக்க இவர் பாவம், படாத பாடுபடுகிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கையில் காசில்லை. ஆகவே உடனடி நிதி நிவாரணம் வேண்டும்.ஒட்டுமொத்த கடன்கள், மீள்செலுத்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு புதிய திகதி அட்டவணை படுத்தப்பட வேண்டும். உள்நாட்டில் புதிய வரிக்கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இவை மூன்றும் சப்றி முன் உள்ள பிரதான சவால்கள் என்று தெரிவித்துள்ள அவர்,சொல்லொணா துயருறும் மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவை தொடர்பில் எதிர்-ஆளும் கட்சி பேதங்கள் இல்லாமல் நாம் அவருடன் ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சப்றியின் குழு நாடு திரும்பியதும் பாராளு மன்ற கட்சிகளின் தெரிவுக்குழுவை சந்திப்பார்.
இடைக்கால ஆட்சி எல்லாம், இந்த அதிகார ஜனாதிபதியுடன் சரிவராது. ஆனால் நிதி அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு நாம் இப்போது பிடுங்கி எடுக்க முயற்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.