மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, புதியவர்களை கண்டு அஞ்சக்கூடிய, உலகில் என்னுடைய இடத்தை தேடக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தேன். அந்த சூழலில் அறிமுகம் இல்லாத ஒரு ஆணுடன் என்னை தனியா தங்க வைத்தது எனக்கு மிகுந்த கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது.
நான் ஏற்கெனவே ஃபெரோஸை (விஜியின் கணவர்) காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஆணுடன் தனியாகத் தங்கி இருக்கிறேன் என்பதை அவனிடம் சொல்லவே நான் மிகவும் அஞ்சினேன். அதனால், நான் அதைச் சொல்லவில்லை. அந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால், அபினய்… ஒரு ஜென்டில்மேன். நல்ல பழக்கவழக்கம் கொண்டவர், கனிவானவர். அவருடைய திரைப் ஆளுமையை பற்றி குறிப்பிடவே தேவையில்லை. அவர் ஒவ்வொரு ஃப்ரேமையும் எளிதாகத் தனதாக்கிக் கொண்டார்.
ஒவ்வொரு இரவும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அவர் ஹாலில் உட்கார்ந்து தனியாக குடிப்பார். அவர் இன்னும் அங்கேயேதான் இருக்கிறாரா என்று பார்க்க, சில சமயம் என் அறையில் இருந்து எட்டிப் பார்ப்பேன். அவர் எப்போதுமே அங்குதான் இருப்பார். ஒரு பாட்டிலை முடித்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பார். இவ்வளவு சிறிய வயதில் ஒருவர் அமைதியாகக் குடிப்பதைப் பார்ப்பது, மனதிற்கு மிகவும் பாரமாக இருந்தது.
கடைசி நாள் இரவில், நான் மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்க்க என் கதவைத் திறந்தேன். இந்த முறை அவர் என்னைக் கவனித்துவிட்டு, அருகில் வரச் சொன்னார். நான் அவர் முன்னால் சென்று அமர்ந்தேன். அவர் எனக்கு ஒரு மது கொடுத்தார். அப்போது நான் குடிப்பதில்லை என்பதால், நான் ‘வேண்டாம்’ என்று மறுத்தேன்.
மேஜை மீது, திறக்கப்பட்ட ஒரு ஃபான்டா பாட்டில் இருந்தது. அதை அவர் எனக்குக் கொடுத்தார். அப்போது, என் மனம், ‘வேண்டாம். உள்ளே என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரியாது’ என்று எச்சரித்தது. எனவே, மீண்டும் ஒருமுறை நான் மறுத்தேன்.
ஆனால், எனக்குள்ளே ஒரு கேள்வி எரிந்து கொண்டிருந்தது, அதை கேட்கக் கூடாது என நானே எனக்கு கடிவாளம் போட்டேன். இருந்தும், அது எளிதாக வெளியே வந்துவிட்டது. “நீங்கள் ஏன் இவ்வளவு அதிகமாகக் குடிக்கிறீர்கள்? நீங்கள் இளைஞராகவும், வெற்றிபெற்றவராகவும் வாழ்க்கையில் நன்றாகவும் இருக்கிறீர்கள்… ஏன் இந்த பழக்கம்?” என்று கேட்டேன்.
அப்போதுதான் அவர் மனம் திறந்து பேசினார். அவர் தனது வாழ்க்கை, தனது பொறுப்புகள், தனது தாய், மற்றும் குடும்பத்தில் உழைப்பவராக இருப்பதன் பாரம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். அவர் மன அழுத்தம், வலி, தனிமை ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை. நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. அவர் சோர்வடையும் வரை, ஏறக்குறைய அமைதி அடையும் வரை, அவருடைய மனதை அவர் கொட்டித் தீர்க்க நான் அனுமதித்தேன்.
அடுத்த நாள் விமான நிலையத்தில், விடைபெறும் நேரம் வந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார், “என் வலியை இப்படி யாரும் இதற்கு முன் கேட்டதில்லை. நன்றி, விஜி. உன்னைப் போலவும் கடவுள் பெண்களைப் படைப்பார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உனக்கு இரட்டைச் சகோதரி யாராவது இருந்தால் எனக்குத் தெரியப்படுத்து”
நான் வாய்விட்டுச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து விடைபெற்றேன். அதுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது. இன்று அவர் காலமானார் என்று கேள்விப்பட்டபோது நான் அழுதேன். ஆனால் அது துக்கத்தின் கண்ணீர் அல்ல. அவருக்காக நான் விசித்திரமான முறையில் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய போராட்டம் முடிந்துவிட்டது. அவர் ஒருவழியாக அமைதியை அடைந்தார் என்பதில் மகிழ்ச்சி.
ஏனெனில் இந்த முறை நான் தெரிந்து கொண்டது என்னவென்றால்… அவர் வலியை மறக்க குடிக்கவில்லை. அவர் சுதந்திரத்தை கொண்டாடியிருக்கிறார்” இவ்வாறு விஜி தெரிவித்துள்ளார்.
