புசல்லாவை, போமண்ட் கீழ்ப்பிரிவு தோட்ட மக்கள், உயிரைப் பணயம் வைத்தவாறு பாதுகாப்பற்ற மரப்பாலம் எனக் கூறப்படும் தற்காலிகப் பாதையைப் பயன்படுத்தி வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உடபளாத்த பிரதேச சபை உறுப்பினர் தேவராஜ் நவநீதராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த மக்களுக்கு பாதுகாப்பான பாலம் ஒன்றை அமைத்துக்கொடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடபளாத்த பிரதேச சபை அமர்வின்போது இந்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்த அவர், டித்வா பேரிடரின்போது குறித்த பாலம் சேதமடைந்ததாகவும், அதன் பின்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரப்பாலத்தையே மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, நாளாந்தம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் பாதுகாப்பற்ற பாதையை மக்கள் கடந்து செல்ல வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதற்கு முன்னர் பாதுகாப்பான பாலம் ஒன்றை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.










