மைதானத்தில் மின்னிய நட்சத்திரம்: சர்வதேசக் கால்பந்தில் மறையும் ஒளி

பெல்ஜியம் கால்பந்து அணியின் முன்னணி வீரரும், அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரருமான ரொமேலு லுகாகு சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான லுகாகு, 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திங்கட்கிழமை (நவம்பர் 16) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் பெல்ஜியம் தேசிய அணியில் அறிமுகமான அவர், இதுவரை 135 போட்டிகளில் விளையாடி 94 கோல்களைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் பெல்ஜிய அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.

மேலும், ஆடவர் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.

நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும், மூன்று ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளிலும் பெல்ஜிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய லுகாகு, 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பெல்ஜியம் மூன்றாவது இடத்தைப் பெறுவதற்கும் முக்கிய பங்காற்றியிருந்தார்.

தனது ஓய்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேசிய அணிக்காக விளையாடிய 16 ஆண்டுகளிலும் தன்னால் முடிந்த அனைத்தையும் வழங்கியதாகவும், அந்தப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு ஆதரவளித்த அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ள அவர், சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவில் முழுமையான திருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது துருக்கியின் பெனர்பாஹ்சே கழக அணிக்காக விளையாடி வரும் லுகாகு, கழக மட்டத்திலான கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

பெல்ஜியத்தின் புகழ்பெற்ற ‘தங்கத் தலைமுறை’ வீரர்களில் ஒருவரான லுகாகுவின் ஓய்வு அறிவிப்பு, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Latest Articles