அனர்த்தங்களை எதிர்கொள்ள புதிய திட்டம்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) முற்பகல் நடைபெற்றது.
காலநிலை மாற்றங்களின் தற்போதைய நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது முகம்கொடுத்துள்ள வெப்பமான காலநிலை மற்றும் அதிக மழைவீழ்ச்சி நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்வுகூறல் தரவுகளை மேலும் பகுப்பாய்வு செய்து, இதன் மூலம் ஏற்படக்கூடிய சமூக தாக்கம் குறித்து எதிர்வுகூறல் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதன் மூலம் குடிநீர், மின்சாரம், உணவுத் தேவைகள் போன்றவற்றை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை கண்டறிவது தொடர்பில் நிலைபேறான தீர்வுகளை வழங்குவதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை புதுப்பித்துக் கொள்ள முடியுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
குறித்த எதிர்வுகூறல் அறிக்கையைத் தயாரித்ததன் பின்னர் கள அதிகாரிகளை அழைத்து இது குறித்து மேலும் கலந்துரையாட வேண்டுமென மேலும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா,அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகெதர, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
……………
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை

கனடா பொலிஸார் அணியும் சீருடையை ஒத்த இந்த வடிவமைப்பு, புதிய சீருடைக்காகப் பரிசீலிக்கப்படும் பல்வேறு மாதிரிகளில் ஒன்றாக உள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
புதிய சீருடையை 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தபோது, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.
இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையில் புதிய சீருடை வடிவமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சீருடையை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டெய்லி நியூஸிடம் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய காக்கி நிறச் சீருடை, இலங்கையின் வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றதாக இல்லாததுடன், அதன் கனமான துணி காரணமாக பொலிஸார் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
………………
பலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பலாங்கொட கஸ்ஸப தேரரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் அமைத்து புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் தவறியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
………………
இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்!

இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கீகாரம் பெற்ற புதிய அரசியல் கட்சிகள் வருமாறு:
1. எமது மக்கள் முன்னணி (Our People’s Front)
2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)
3. தமிழ் தேசிய பசுமை அமைப்பு (Tamil National Green Organization)
இந்த மூன்று கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(5)ஆம் பிரிவின் கீழ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
…………….
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் இன்று (16)கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
……………..
புதிய பயனாளிகளுக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் நவம்பர் 27ஆம் திகதி
புதிதாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கான அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் கீழான கொடுப்பனவுகள், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்ததாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்தார்.
…………..










