தீபாவளி பண்டிகையையொட்டி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்புரிந்து வரும் மலையக மக்கள், தமது சொந்த இடங்களுக்கு வந்திருந்த நிலையில், மீண்டும் பணியிடங்களுக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் இன்று (16) பெருமளவில் குவிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மலையகத்துக்கு வருகை தந்திருந்த மக்கள் மீண்டும் பணியிடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ள போதிலும், இன்று ஒரே நேரத்தில் பெருமளவிலான பயணிகள் கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பேருந்து நிலைய நேரக் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், ஹட்டன் டிப்போவிலிருந்து 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஹட்டன் பேருந்து நிலையத்துக்கு பல இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் வருகை தரவுள்ளதாகவும், அவை வந்தடைந்த பின்னர் வரிசையில் காத்திருக்கும் பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துப் பயணிகளும் ஆசனங்களில் அமர்ந்து பயணிக்க விரும்புவதால், கொழும்பு நோக்கிய பயணத்துக்கு போதிய பேருந்துகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.










