ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கார் ஒன்று சுவருடன் மோதியதில், சிறுமி பாடகி செனுமி கிவன்சா உட்பட நால்வர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (16) அதிகாலை சுமார் 4 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காலியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சிறுமி பாடகி தனது தாய் மற்றும் மேலும் இருவருடன் வெலிமடை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஹட்டன் கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் மதிலுடன் கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்த சிறுமி பாடகி, அவரது தாய், சாரதி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நால்வரின் நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், விபத்தில் கார் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சாரதி வாகனம் செலுத்திக்கொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்திற்கு உள்ளானதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.










