ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.
இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்துள்ளார்.