ஆப்பு வைத்தார் ராதா! பதிலடி காத்திருக்கிறது என்கிறார் அனுசா!!

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலும் இருந்தும் பிரதி பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அனுசா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹட்டனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி இந்த கருத்தை வெளியிட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், நிதிச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர்மட்ட அங்கத்தவர்களும் தேசிய சபை பொதுச் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கட்சியின் உயர் பீடம் தேசிய சபை பொதுச் சபை ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்ற 245 அங்கத்தவர்களில் 204பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் அனைவரும் கீழ் கண்ட தீர்;மானங்களுக்கு ஏகமனதாக தங்களுடைய சம்மதத்தை வழங்கினர்.

1.அனுசா சந்திரசேகரன் கட்சியின் யாப்பிற்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக அவரை அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவது எனவும் எதிர்வரும் காலத்தில் அனுசா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் கொடியையோ கட்சியின் நிறத்தையோ அல்லது அவர் ஏற்கனவே வகித்த பிரதி பொது செயலாளர் நாயகம் என்ற பதவியையோ எந்த சந்தர்ப்பத்திலும் பாவிக்க முடியாது.

2.ம.ம.முன்னணியின் ஒரு அங்கமாக செயற்பட்ட ஆசிரியர் முன்னணியின் செயலாளராக செயற்பட்ட எஸ்.ரவீந்திரன் கட்சியின்  அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவதாகவும் மிக விரைவில் புதிய ஆசிரியர் முன்னணி உருவாக்குவதற்கும் தீர்மானிக்கபட்டது.

3.மலையக மக்கள் முன்னணியின் ஒரு அங்கமாக தோட்ட சேவையார்களை உள்வாங்கி அவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது எனவும்

4.மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளராக செயற்பட்ட பேராசிரியர் விஜயசந்திரனை பிரதி பொதுச் செயலாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டமை

5.கட்சியிக்கான 25 பேர் கொண்ட புதிய நிர்வாக சபை ஒன்றை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களுக்கே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உரிய நேரத்தில் உரிய பதிலடியை கொடுப்பதற்கு அனுசா சந்திரசேகரன் தயாராகிவருகிறார் என அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles