ஆயிரம் ரூபா சம்பளமும், அஷ்டமத்து சனியும்..!

ஏழரை சனியைவிட எட்டாமிட சனியான அஷ்டமத்து சனியே மிகவும் ஆபத்தானது என்கிறது ஜோதிடம். பழி பாவம், வலி – வேதனை, ஏமாற்றம், காரிய தடைகள் போன்ற கெடுபலன்களை அது அள்ளி வழங்குவதால் இன்பம் விலகி – துன்ப மேகங்களே சூழ்ந்துகொள்ளுமாம்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாட் சம்பளம் ஆயிரம் ரூபா விவகாரத்திலும் அஷ்டமத்து சனி பாய்விரித்து படுத்திருப்பதுபோலவே ‘தொழிற்சங்க நகர்வுகள்’ அமைந்துள்ளன.

குறிப்பாக கூட்டாக களமிறங்கி ஒருமித்த நோக்கோடு – இலக்கை அடைவதற்காக சமராடவேண்டிய தருணத்தில் தொழிற்சங்கங்களோ ‘மற்றைய தரப்பு’மீது பழி பாவம் சுமத்தும் தந்திரத்தை கையாண்டுவருகின்றன. தொழிலாளர்களோ வலி – வேதனையாலும், ஏமாற்றத்தாலும் துடிதுடிக்கின்றனர்.

இந்நிலையில் சனியனை எதிர்த்து போராடி – பரிகாரம் செய்தேனும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்போம் என சூளுரைத்தவர்கள் தற்போது வாலை சுருட்டிக்கொண்டு ‘தந்திரோபாய பின்வாங்கலில்’ ஈடுபட தயாராகிவருகின்றனர்.

அதுமட்டுமல்ல இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும்…..இல்லை….இல்லை நாளை மறுதினம் கட்டாயம் கிடைக்கும் என்றெல்லாம் பழைய பல்லவியே பாடப்பட்டுவருகின்றது.

தொழிற்சங்கங்களிடம் உறுதியானதொரு சம்பள திட்டம்கூட இல்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களிடம் புரிந்துணர்வும் இல்லை. மூன்று சங்கங்களும் வெவ்வேறான நிலைப்பாட்டிலேயே உள்ளன. ஆனால் முதலாளிமார்களோ சம்பள திட்டத்தை முன்வைத்து – அதனை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களிடமும் சம்பள உயர்வுக்கான முன்மொழிவு இல்லை. இவ்வாறு உரிய திட்டம் எதுவும் இல்லாமல், ஆயிரம் ரூபா என்ற கோஷத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று – நீயா, நானா என அரசியல் சமரில் ஈடுபடுவதால் கடைசியில் கம்பனிகளுக்கே அது சாகமாக அமைந்துவிடும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் இம்முறையும் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு தொடர்கின்றது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என தோட்டக் கம்பனிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.

அரசியல் மற்றும் தொழிற்சங்க பலத்தை பயன்படுத்தி ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடைவதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டாலும், கம்பனிகளின் உடும்புப்பிடியை அவற்றால் தகர்க்க முடியவில்லை.

அதேபோல பெருந்தோட்டங்களின் காணி உரிமை தம்வசம் இருந்தும், அவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. அமைச்சரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி ‘1000’ கூத்துகள் அரங்கேற்றப்பட்டாலும் தீர்வு உறுதியா என்பது கேள்விக்குறியே.

அமைச்சரவை தீர்மானம் என்பது இறுதி முடிவு அல்ல.இறுதி முடிவை நோக்கி நகர்வதற்கான ஆரம்ப புள்ளியே அது. எனவே, அமைச்சரவை தீர்மானித்துவிட்டது என்ற செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு அரசுக்கு சார்பாக காவடி தூக்கி அலகு குத்துவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது.

அத்துடன் தொழிலாளர்கள் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கோரிய நிலையில், ஆயிரம் ரூபாவரை என்ற சொற்பதத்தின் ஊடாக அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்காது என்பதனை அரசு உறுதிப்படுத்திவிட்டது.

கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன?

வெள்ளையர்களிடமிருந்து 1972 இல் தேசியமயப்படுத்தப்பட்ட பெருந்தோட்டங்கள் 1990 காலப்பகுதியில் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. அதன்பின்னரே 1992 முதல் கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அரச – தனியார் துறையினருக்கான சம்பளமானது சம்பள நிர்ணயச்சபையினூடாகவே நிர்ணயிக்கப்பட்டாலும் -மலையகத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மேற்படி சபை தலையிடாது. கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

இதன்படி பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையே கூட்டுஒப்பந்தம் எனப்படுகின்றது.

பொருளாதாரம் – வாழ்க்கைச்செலவு ஆகியவற்றுக்கேற்ப சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதாலேயே இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. இருந்தும் அந்த சரத்துகளை தோட்டக்கம்பனிகள் கடந்த காலங்களில் பின்பற்றவில்லை. இதனால், ஒப்பந்தத்தின் முழுமையான நன்மையை தொழிலாளர்களால் நுகரமுடியாமலுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன தொழிலாளர்கள் சார்பிலும் சுமார் 23 கம்பனிகள் நிர்வாகத்தின் சார்பிலும் பேச்சுகளில் பங்கேற்கும். இதில் இரு அரச நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.

2013 முதல் 2019வரை ‘சம்பள உயர்வு’ பேச்சு

கடந்துவந்த பாதை…….

ஆரம்பகாலகட்டத்தில் பெருந்தோட்டத்துறையில் தொழில் புரியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான முறையிலேயே சம்பளம் வழங்கப்பட்டது.காலப்போக்கிலேயே இரு பாலாருக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது. ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும், பொதுத்தேர்தல் நெருங்கியதால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் ஆயிரம் ரூபா சம்பளம் அவசியமென்ற கோரிக்கை தேர்தல் குண்டாக வீசப்பட்டது.

அதன்பின்னர் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆயிரம் ரூபாவுக்காக குரல் கொடுத்தன. எனினும், கம்பனிகள் இணங்கவில்லை. அப்போதும் ஆயிரம் ரூபா வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வை வலியுறுத்திலும் மலையகத்தில் எட்டுத்திக்கலும் வெடித்த தொழிற்சங்க போராட்டங்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும், தலைநகரிலும் ஏன்! புலம்பெயர் நாடுகளில்வாழும் பாட்டாளி வர்க்கத்தினர் நேசக்கரம் நீட்டினர்.

இவ்வாறு 18 மாதங்களாக போராட்டங்கள் தொடர்ந்ததால் தொழிலாளர்களின் பொருளாதாரமும் ஆட்டம்காண தொடங்கியது. ஆரம்பத்தில் தொடர்,அதன்பின்னர் சுழற்றி முறையென போராட்டவடிவங்கள் உருமாறியதாலும், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்திலும் இறுதியில் ஏனோதானோவென ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

2013 காலப்பகுதியில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாட் சம்பளமாக 450 ரூபா உட்பட நாளாந்த சம்பளமாக 630 ரூபாவை பெற்றனர்.

2016 இல் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவும், வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 60 ரூபாவும், நிலையான கொடுப்பனவாக 30 ரூபாவும் ,உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவுமாக நாளொன்றுக்கு 730 ரூபா வழங்கப்பட்டது.

எனினும், 2019 இல் புதிதாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. விலைக்கேற்ற கொடுப்பனவாக 50 ரூபா வழங்கப்பட்டது. விலைக்கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு என்பன நீக்கப்பட்டன. இதன்படி நாளொன்றுக்கான சம்பளமாக 750 ரூபாவை தொழிலாளர்கள் பெற்றனர். கூட்டிக்கழித்து பார்த்தால் ஆயிரம் ரூபாவை எதிர்ப்பார்த்த தொழிலாளர்களுக்கு வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக கிடைத்தது என்பது கசப்பான உண்மையாகும்.

தற்போது அடிப்படை நாட் சம்பளமாக 700 ரூபாவை பெறும் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்தின் ஊடாக மேலும் 300 ரூபா அதிகரிக்கப்பட்டு ஆயிரம் ரூபாவை அடிப்படை நாட் சம்பளமாக எதிர்ப்பார்க்கின்றனர். இதற்காக 5 வருடங்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கின்றது.

இந்நிலையில் ‘அடிப்படை’ என்ற பதத்தைநீக்கிவிட்டு, தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளம் (அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கி) 2020 மார்ச் முதல் ஆயிரம் ரூபாவாக இருக்கவேண்டும் என 2020 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பைக்கூட கம்பனிகள் ஏற்கவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் ஆயிரம் ரூபா தொடர்பான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இதனை வழங்க மறுக்கும் கம்பனிகளின் முகாமைத்துவம் மறுசீரமைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கும் கம்பனிகள் பணிவதாக தெரியவில்லை. தம்மால் முன்வைக்கப்படும் தீர்வு திட்டமே நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில் முதலாளிமார் சம்மேளனத்தினர் உறுதியாக நிற்கின்றனர். அதாவது அடிப்படை நாட் சம்பளத்தை சொற்பள அளவு உயர்த்துவதற்கே கம்பனிகள் தயாராகவுள்ளன.

– ஆர்.சனத்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles