காதல் விவகாரம் தொடர்பில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர் .இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியை. பணிக்கு செல்ல வசதியாக தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய மூத்த மகன் 27 வயதான கவின் செல்வகணேஷ் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27 ஆம் திகதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதி மகன் சுர்ஜித் என்பவர் கவினை வெட்டி கொன்றது தெரியவந்தது.
தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிடாததால் கவினை வெட்டிக்கொன்றதாக பொலிஸாரிடம் அவர் தெரிவித்தார்.
உடனே சுர்ஜித்தை பொலிஸார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு சுர்ஜித் தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணனையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
நேற்று பாளையங்கோட்டை பொலிஸார் இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்தனர்.
பாளையங்கோட்டை பொலிஸ் உதவி கமிஷனரும், விசாரணை அதிகாரியுமான சுரேஷ், வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜிடம் வழங்கினார்.
பின்னர் அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் நிலையத்தில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கவினின் உடலை அவரது தம்பி பிரவீன் பெற்றுக்கொண்டனர்.நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் எடுத்து செல்லப்படுகிறது.