மசாஜ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு சென்ற ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த நபரொருவர் முயற்சித்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டார் எனக் கூறப்படும் பெண்ணாலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. கண்டி, கம்பளை – வெலம்பொட பகுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை (09) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில் இருந்து இருந்து நுவரெலியாவுக்கு வருகை தந்து , நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் மேற்படி முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 39 வயதான ஆஸ்திரேலிய பெண்,
“ எனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா நிமிர்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இலங்கை வந்தேன். அதிகமான சுற்றுலா இடங்களை பார்வையிட்டு கடந்த 9 ஆம் திகதி வெலம்பொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நாம் தங்கி இருந்தோம். அன்று மாலை குறித்த ஹோட்டலில் உடலுக்கு மசாஜ் செய்துக்கொள்ள மசாஜ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றிருந்தேன்.
தலை, தோள்பட்டை ஆகிய பகுதிகளை மசாஜ் செய்யவே சென்றிருந்தேன். எனினும், எனது உடலை மசாஜ் செய்யும் போர்வையில் மசாஜ் செய்த ஊழியர் அந்தரங்க பகுதிகளை, தவறான நோக்கில் தொட்டதன் காரணமாக நான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினேன். அதன் பின்னரே உடனடியாக அங்கிருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்தோம்.” – என்று முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் பகுதிக்கு தெரிவித்து, சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ஆம் இணைப்பு –
அத்துமீறி நடக்க முற்பட்டார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட நபர் இன்று மதியம், கம்பளை, வெலம்பொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.