இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து இந்த பௌத்த புனித அடையாளச் சின்னங்கள் கொண்டு வரப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக உறவை வளர்க்கும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகளின் அதிஉயர் பீடங்களைச் சேர்ந்த பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு யாத்திரை சென்றுள்ளனர்.
”இந்தியாவும், இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை. இரு நாடுகளுக்கும் இடையில் கடல்சார் அண்டை நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று பௌத்த தொடர்புகள் நிறையவே உண்டு.” என்று இலங்கையின் அதிஉயர் பௌத்த பிக்குகளின் தூதுக் குழுவொன்று இந்திய யாத்திரையின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐந்துநாள் பயணமாக புத்த கயா புனித நகருக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தபோது நடந்த சொற்பொழிவுகளில் இந்த பௌத்த பிக்குகள் இதனைத் தெரிவித்தனர்.
அஸ்கிரிய பீடத்தின் வணக்கத்துக்குரிய தம்மரதன தேரர், அசோக சக்கரவர்த்தியின் புதல்வர் மகிந்த தேரர் இலங்கைக்கு பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியதை நாம் அறிவோம். அன்று முதல் இன்று வரை இலங்கையில் பௌத்தமே பிரதான மதமாக உள்ளது.
“பௌத்தம் மட்டுமல்ல, அவர் மூலம் நிறைய விடயங்களை இலங்கைப் பெற்றது. குறிப்பாக பௌத்தம், கல்வி மற்றும் பிற நுட்பங்கள் ஆகியன கிடைத்தன. பௌத்தத்திலிருந்து நாங்கள் நிறைய பெற்றோம். இதனை நாம் பெரிதும் போற்றுகிறோம். இந்தியாவை எப்போதும் ஒரு பௌத்த தாய்நாடாகவும் எங்களுடையதாகவும் மதிக்கிறோம். இலங்கையின் மூத்த சகோதரன் இந்தியா. ஏனெனில் இந்தியா எப்போதும் எமக்கு உதவியது. தற்போது நிலவும் பொருளாதார சிக்கல்களின்போதும் பெரிதும் உதவியது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள புகழ்பெற்ற மடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்த சங்க உறுப்பினர்கள் புத்த கயாவில் புனித தலாய் லாமாவின் மூன்று நாள் புனித போதனைகளில் கலந்து கொண்டனர்.
அசோக சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்தில் புத்தபெருமான் இலங்கைக்கு விஜயம் செய்த விதம் மற்றும் பௌத்தம் பரவிய விதம் குறித்து இலங்கை ராமான்ய நிகாயாவின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய மகுலேவே விமல மகாநாயக்க தேரர் நினைவு கூர்ந்தார்.
“பௌத்த தத்துவம் இந்தியாவில் பிறந்தது, புத்தர் இந்தியாவில் வாழ்ந்தார். எனவே, வரலாற்றின் படி, புத்தர் ஒரேயொரு அயல்நாட்டுக்கு விஜயம் செய்தார். அதுதான் இலங்கை. அவர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அசோகப் பேரரசர் காலத்தில், அவர் போன்ற பௌத்த மிஷனரிகளை அனுப்பினார். அவர்கள் இலங்கைக்கு வந்து பௌத்த ஆட்சியையும் கலாச்சாரத்தையும் நிலைநாட்டினர். அன்றிலிருந்து நாங்கள் அதே கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொண்டோம். இப்போது, நாம் ஒரு பௌத்த நாடாக மாறியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
தேரவாத பௌத்தம் இலங்கையின் மிகப்பெரிய மற்றும் உத்தியோகபூர்வ மதமாகும், இது சுமார் 70 சதவீத மக்களால் பின்பற்றப்படுகிறது.
இந்தியாவும் இலங்கையும் ஏறக்குறைய ஒரே கலாசாரத்தைப் பகிர்ந்துகொண்டன. இதன்மூலம் இரு நாடுகளையும் மிக நெருக்கமாக இருப்பதாக மல்வத்து சியாம் மகா நிகாயாவின் உப பீடாதிபதி (அனுநாயக்க) அதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் தெரிவித்தார்.
“எங்கள் சரித்திரங்களில், மகாவம்ச சரித்திரங்கள் உள்ளன. பௌத்தத்தை அதன் புனித தூய்மையில் அதாவது சாசனம், தம்மம், சடங்குகள் மற்றும் அனைத்தையும் பாதுகாக்கிறோம். அது எங்கள் பாரம்பரியம். இது இந்திய மூதாதையர்களிடமிருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன், இல்லையெனில்
”எங்கள் சிங்கள மொழி, பாலி, சமஸ்கிருத மொழிக்கு மிக நெருக்கமானது. உண்மையில், நாங்கள் இரண்டு மொழிகளையும் மதிக்கிறோம். எங்கள் தாய்மொழி பாலி மற்றும் சமஸ்கிருதம் என எங்கள் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.” என்றார்.
இலங்கையில் உள்ள இளம் தலைமுறையினர் தங்களது பாடப்புத்தகங்கள் மூலம் வரலாற்று முக்கியத்துவத்தை அறிவார்கள் என முருத்தேனிய தம்மரதன தெரிவித்தார்.
“எங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில், குழந்தைகளுக்காக பௌத்த விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஞாயிறு சமய வகுப்புக்கள் நடக்கின்றன. பௌத்தத்தின் பின்னணி, புத்தர் பிறந்த இடம், அன்றைய சூழ்நிலை மற்றும் ஆதாரம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். ” என்று அவர் கூறினார்.
பௌத்தம் மற்றும் அதன் போதனைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து ஏராளமான துறவிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
இலங்கையைச் சேர்ந்த 18 பௌத்த இளம் பிக்குகள் தற்போது இந்தியாவில் உள்ளனர். அவர்கள் ஒரு மாத காலம் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபையின் மகாநாயக்க தேரர் வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் இருந்து மட்டுமல்ல, தாய்லாந்தில் இருந்து ஒரு புத்த பிக்குகள் குழு மற்றும் திபெத்திய புத்த பிக்குகள் குழு மற்றும் மியான்மரில் இருந்து ஒரு குழு தற்போது இந்தியாவில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
“இந்தியா புத்த மதத்தின் பிறப்பிடமாகும். எனவே, இந்த இளம் துறவிகள் இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்கள், இது எதிர்காலத்தில் பல தொடர்புகளை உருவாக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வாறான வருகைகள் இலங்கை மற்றும் இந்தியாவுடன் மட்டுமன்றி ஏனைய அண்டை நாடுகளுடனும் பௌத்த உறவுகளில் ஒரு திருப்புமுனையாக அமைவதாக பௌத்த துறவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.