உலகிலுள்ள மதங்களுள் பௌத்தமும் புனிதமானது. அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர்தான் புத்தர்.
ஆசை இல்லாமல் இருப்பதே இன்ப நிலை என்றும், ஆசையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் என்பதையும் அவர் எடுத்துரைத்திருந்தார். புத்தரால் போதிக்கப்பட்ட விடயங்கள் அல்லது அதற்கு ஒப்பான நடைமுறைகள் இன்றைய நவீன யுகத்திலும் பின்பற்றப்படுவதாலேயே இந்த பிரபஞ்சத்தில் அமைதி குடிகொண்டுள்ளது. ஆங்காங்கே போர்கள் மூண்டிருந்தாலும் அன்பு, அகிம்சை, விட்டுக்கொடுப்பு இருந்தால் மாத்திரமே அவற்றுக்கும் தீர்வு காணமுடியும். இந்த பொக்கிஷத்தை இந்தியா இலங்கைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அன்பையும், அகிம்சையையும் உலகுக்கு போதித்த பௌத்த மதத்தின் பிறப்பிடம் – தாயகம் இந்தியாவாகும். இலங்கை, மியன்மார், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் பௌத்தம் இன்று ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. ‘பௌத்தம்’ இந்தியாவிடமிருந்து தமக்கு கிடைத்த சிறந்த – உயரிய பரிசென மேற்படி நாடுகள் கருதுகின்றன. இது தொடர்பில் பகிரங்க அறிவிப்புகளையும் விடுத்துள்ளன. மேலும் பல நாடுகளிலும் பௌத்த மதம் பின்பற்றப்பட்டுவருகின்றன.
இந்தியாவில் இந்து மதமே முதன்மையாக உள்ளபோதிலும் பௌத்த மதத்துக்குரிய மதிப்பு, மரியாதை அப்படியே பாதுகாக்கப்படுகின்றது. அதாவது குழந்தையொன்றுக்கு தாய்வீட்டில் எப்படியான அன்பும், அரவணைப்பும் கிடைக்குமோ அதற்கு நிகரான வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பௌத்த மதத்தை உலகுக்குள் வழங்கியது மட்டுமல்லாது பௌத்த யாத்திரிகளுக்கு மறக்க முடியாத வழிபாட்டு தலமாகவும் அதற்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துகொடுக்கும் நாடாகவும் இந்தியா திகழ்கின்றது. அதனால்தான் வருடாந்தம் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு படையெடுத்துசெல்கின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள பௌத்த வழிபாட்டு தளங்கள் பேணி பாதுகாக்கப்படுவதுடன், வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின்கீழ் இவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
சுற்றுலா வணிகத்தை மாத்திரம் இலக்கு வைக்காமல் இதுவிடயத்தில் உண்மை அக்கறையும், உதவக்கூடிய உணர்வும் கலந்துள்ளது என்பதை இந்தியா வந்து செல்லும் யாத்திரிகள் உணர்கின்றனர். அது பற்றி சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே பதிவுகளையும் பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல இடங்களில் பௌத்த வழிபாட்டு தலங்கள் உள்ளன. இவற்றுள் புத்தர் தனது அரச வாழ்வை துறந்து துறவுக்கோலம் பூண்டு துறவியாக வாழ்ந்த புத்தகயா, ஒட்டு மொத்த பௌத்த சுற்றுலா மண்டலமாக விளங்கும் ராஜ்கிர், புத்தபிரான் மகா பரிநிர்வானா அடைந்த குஷிநகர் உள்ளிட்ட இடங்கள் இலங்கையர்களுக்கு பிரதானமானவை .
இந்நிலையில் புத்தபிரான் மகா பரிநிர்வாணம் அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக குஷிநகரில் அண்மையில் சர்வதேச விமான நிலையமொன்றுகூட அமைக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையில் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையை உலகவாழ் பௌத்த மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
பௌத்த யாத்திரிகளுக்கென இந்திய ரயில்வே திணைக்களத்தால் விசேட ஆன்மீக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக அந்த சேவை இடம்பெறுவது இலங்கையில் இருந்து செல்லும் யாத்திரிகளுக்கும் பேருதவியாக இருந்துவருகின்றது. இலங்கை யாத்திரிகள் லும்பினி செல்வதால் நேபாளம் செல்வதற்கான ஏற்பாடுகளும் உள்ளன. சிறந்த – தகுதியான வழிகாட்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்குமிட வசதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கும் விசேட விலைக்கழிவுகள் உள்ளன.
அத்துடன், பௌத்த வழிபாட்டு தலங்களில் சிங்கள மொழியை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஏனைய சர்வதேச மொழிகளை காட்சிப்படுத்துவது தொடர்பான பரிசிலனைகளும் இடம்பெற்றுவருகின்றன.
வழிபாட்டு தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கு பக்தர்கள் திட்டமிட்டால் அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. அண்மையில் தென்கொரியாவில் இருந்த வந்த யாத்திரிகள் குழுவொன்றுக்கு இதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பௌத்த யாத்திரிகள் விடயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயற்பட்டுவருவதையும் காணமுடிகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு – செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடுகள்கூட இடம்பெறுகின்றன.
யாத்திரிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், பிரச்சினைகள் வந்தால் தூதரக உதவியை இலகுவில் நாடவும், வழிபாட்டு பருவ காலத்தில் விசேட பிரிவுகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் உட்பட பல விடயங்களை, வழிபாடுகளுக்காக வரும் பௌத்தர்களுக்கு இந்தியா பக்தி உணர்வோடு செய்து கொடுத்துவருகின்றது. இதன்மூலம் இலங்கையர்கள் பெரிதும் பயன் அடைகின்றனர். வழிபாடுகளுக்கு செல்லும் வழியில் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டால் விசேட விமானங்கள்மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகின.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் (06) ஆம் திகதி நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்களும், பெளத்த யாத்திரிகளுக்காக இந்தியாவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.