”இலங்கை அரசியல்வாதிகள் ஊழல், மோசடி நிறைந்தவர்கள். இதனாலேயே நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மூன்று வேளை உண்ண வழியில்லாமல் போயுள்ளது. வாழ்க்கை நரகமாகியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்காமல் பிரித்தானியாவின் காலனியாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. இந்தியாவின் பிராந்தியமாக மாறிவிட்டால் இந்த நிலைமை சரியாகிவிடும்.” என்பது போன்ற விரக்தியான வார்த்தைகளை பாமர மக்கள் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது.
இவை ஒன்றும் நடைமுறைச் சாத்தியமானது அல்ல என்று மக்கள் தெரிந்திருந்தாலும், விமோசனம் எதுவும் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் விரக்தியில் அவர்கள் இவ்வாறு முணுமுணுப்பதை உணர முடிகிறது. இந்த நிலையில்தான், இலங்கை நாணயமாக இந்திய ரூபாவை ஏற்பதற்கான முயற்சிகள் நடப்பதாக சில செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொருளாதாரம் மோசமாகி, இலங்கை ரூபா செல்லாக்காசாகி விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இந்திய ரூபாவின் புழக்கம் குறித்த செய்திகளில் மக்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
10,000 டொலர் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர் பணமாக வைத்திருக்க இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இந்திய ரூபாவை இலங்கையின் சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கு எதிராக மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.
இந்திய ரூபா இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையர் இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் இலங்கையில் வதிவோர், வதியாதோருக்கிடையில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையருக்கு இடையிலான பரிவர்த்தனைகள் வங்கிச் சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி வழங்கிய போதிலும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த செயற்பாடானது ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயின் பெறுமதியை வலுவாக்கவும், அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கு நாணயம்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் யுரோ என்ற நாணயத்தை புழக்கத்தில் வைத்துள்ளன. இதுபோன்று தெற்காசிய நாடுகள் இணைந்து, ஒரு வலுவான, பொதுவான நாணயத்தை புழக்கத்தில் கொண்டுவருவதற்கான கருத்தாடல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள அரசியல் ரீதியான முரண்பாடுகள் இந்த முயற்சியை தோல்வியடையச் செய்யும் என்ற கருத்துக்களும் இருக்கின்றன. ஆனால், பிராந்தியமாக, நாடாக வலுவாக இருக்க வேண்டுமாயின் இவ்வாறான முயற்சிகள் வலுசேர்க்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு இது பெரிதும் உதவும். இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ள நிலையில், இலங்கையின் பணம் செல்லாக்காசாகி, மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகுவதைவிட மாற்றுவழிகளை சிந்திக்க வேண்டும். வாழும் காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். பிள்ளைகளுக்கு நிலையான எதிர்காலம் ஒன்று வேண்டும். இதற்கான வழிகளைத் தேட வேண்டும். இதற்கு மாற்றுவழிகளைச் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனாலேயே ஏதாவது ஒரு வழியில் வாழ்வதற்கான அடிப்படை உரிமை கிடைக்க வேண்டும் என்றும் மக்கள் எண்ண ஆரம்பித்துள்ளனர்.