இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை: விமானங்கள் பறக்க தடை!

 

பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை.

1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது.

எழில் கொஞ்சும் இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் கூடவே இருக்கும் என்பதுபோல அந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. அதன்படி லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் நேற்று வெடித்து சிதறியது.

இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது. இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது.

எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது. எனவே எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Articles

Latest Articles