” கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் இன்னும் மூன்று வருடங்களாவது வாழவேண்டிவரும். எனவே, கொரோனா முதலாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு கையாளப்பட்ட நடைமுறைகளை தற்போது முழுமையாக பின்பற்றமுடியாது.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவைவருமாறு,
” கொரோனா வைரஸ் என்பது உலகளாவிய தொற்றாகும். வைரசுக்கு பெயரிடுதல், எவ்வாறான சுகாதார அணுகுமுறைகளைக் கையாளவேண்டும் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனமே ஆலோசனைகளை, வழிகாட்டல்களை வழங்கும்.
முதலாவது அலை ஏற்பட்டபோது பொது முடக்க முறைமை (லொக்டவுன்) கையாளப்பட்டது. ஆனால் 2ஆவது அலையின்போது பெரும்பாலான நாடுகள் ஆரம்பத்தில் கடைபிடித்த நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. தற்போது உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல்களை வழங்கிவருகின்றது.
இன்னும் மூன்றரை வருடங்களாவது கொரோனாவுக்கு மத்தியில் வாழவேண்டிய நிலை ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட வழிகாட்டலில் நாட்டை முடக்கும் யோசனை, வழிகாட்டல் இல்லை. அவ்வாறு நாட்டை தொடர்ச்சியாக முடக்கி வைத்திருக்கவும் முடியாது. எனவே, முதலாவது அலையின்போது செயற்பட்டதுபோல தற்போது செயற்படமுடியாது.
சுகாதார சேவைகள் பணிப்பாளராக செயற்பட்ட அனில் ஜயசிங்கவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை கொரோனா தடுப்பு கூட்டங்களில் பங்கேற்குமாறு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.